பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ கிராம மக்கள் தர்ணா போராட்டம்
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு நடுவூர் மாதாக்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள இருதரப்பு மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.
இது தொடர்பாக பல முறை வருவாய்த்துறை தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு எட்டப்படாமல் நீடித்து வருகிறது. அண்மையில் நடுவூர் மாதாக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை விதித்தும் சில நாட்களுக்கு பிறகு தடையை நீக்கியும் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவு பிறப்பித்தார்.
அவ்வப்போது இருதரப்பும் மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி மீண்டும் இருதரப்பும் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருப்பாலைவனம் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொன்னேரியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடுவூர் மாதக்குப்பம் மீனவ கிராமத்தின் ஒரு தரப்பினர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஓராண்டாக மீன்பிடிப்பதில் எல்லை பிரச்சினை காரணமாக தொழிலுக்கு செல்லாமல் தங்களது தரப்பு வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், எதிர்தரப்பினர் அவ்வப்போது வந்து தங்களை தாக்குவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், மீன்பிடிப்பதில் உள்ள உரிமை தொடர்பாக அதிகாரிகள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். இது தொடர்பாக சமாதானம் பேச வந்த வட்டாட்சியர் செல்வகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் சமரசம் பேசிய வட்டாட்சியர் செல்வகுமார் 1ஆம் தேதி இருதரப்பினரை அழைத்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.