சிறுவாபுரி முருகன் கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் வாக்குவாதம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் கதவு மூடப்பட்டதால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-09-18 03:15 GMT

சிறுவாபுரி முருகன் கோவிலில் தரிசனத்திற்கு கதவை திறக்க  கோரி  பக்தர்கள் கோவில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு தரிசன நேரம் முடிந்து கோவில் கதவு மூடப்பட்டதால் கோவில் வாசலில் திரண்டிருந்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6.வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

நேற்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை விடுமுறை நாள் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இரவு சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். எனினும் குறிப்பிட்ட நேரத்தில் கோவில் வெளிப்புற கதவு மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்போது அங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலின் கதவு அருகே திரண்டு தங்களை உள்ளே அனுமதிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரிசன நேரம் முடிந்து கோவில் மூடப்பட்டதால் மற்றொரு நாளில் வந்து தரிசனம் செய்து கொள்ளுமாறு கூறி அங்கிருந்து பக்தர்களை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News