சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

ஆயுபூஜை நாள் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-10-04 10:15 GMT

சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் ஆயுத பூஜை விடுமுறை நாள், செவ்வாய்க்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கும்பாபிஷேகம் முடிந்து மண்டலபூஜை நடைபெற்று வரும் நிலையில் சுமார் 3மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என ஆறு இடங்களில் உள்ள தமிழ்க்கடவுன் முருகன் ஆலயங்கள் அறுபடை வீடு என அழைக்கப்படுகின்றன. மருதமலை முருகனின் ஏதாவது படைவீடாக போற்றப்பட்டு வருகிறது. 

அதற்கு அடுத்த படியாக திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தில் பங்கெடுக்க முடியாதவர்கள் மண்டல பூஜை நடைபெறும் 48 நாட்களில் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆயுத பூஜை விடுமுறை தினம், மண்டல பூஜை ஒருபுறம், செவ்வாய்க்கிழமை மறுபுறம் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் தற்போது அலைமோதுகிறது.

செவ்வாய்க்கிழமை தோறும் 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்ட மக்களும் ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். இலவச தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வழக்கமாகவே செவ்வாய்க்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்கும் சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜை, ஆயுத பூஜை விடுமுறை தாள் என்பதால் பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News