வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5அலகுகளில் நிலக்கரியை எரியூட்டி மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவு, சாம்பல் பிரிவு, பராமரிப்பு பிரிவு, மின் உற்பத்தி பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம், குடும்பத்துடன் உண்ணாவிரதம் என பலகட்ட போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வந்தனர். தொழிலாளர்களின் பல கட்ட போராட்டத்திற்கு பின்பும் அனல் மின் நிலைய நிர்வாகம், மின்வாரியமும் தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து செவிசாய்க்காமல் இருந்து வந்தன.
இந்நிலையில் வடசென்னை அனல் மின் நிலைய 2ஆம் நிலையின் வாயிலில் இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அனல் மின் நிலைய நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அனல் மின் நிலையத்தில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்களை ஒப்பந்த தொழிலாளர்கள் என்று கூட அங்கீகரிக்கப்படாமல் தினக்கூலிகளாக வகைப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர். நாளொன்றுக்கு 600ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு விதிகளை பின்பற்றாமல் 300ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் வகையில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும் எனவும், பண்டிகை காலங்களில் போனஸ் வழங்க வேண்டும், பணி நேரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும், விபத்து காப்பீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அண்மையில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களை அடையாளம் கண்டு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தினர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரித்தனர்.