பொன்னேரி அருகே காங்கிரஸ் தெருமுனை கூட்டம்

பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-01-29 06:45 GMT

பொன்னேரி அருகே காங்கிரஸ் தெருமுனை கூட்டம் நடந்தது.

காங்கிரஸ் கட்சியினால் மட்டுமே உண்மையான ராமராஜ்ஜியத்தை வழங்க முடியும். நகைகளுடன் ஒரு பெண் நள்ளிரவில் நடமாட வேண்டும் என காந்தியடிகள் எண்ணியதே உண்மையான ராமராஜ்ஜியம். பாஜக ஆட்சியில் இந்த ராமராஜ்ஜியம் நடக்குமா? பொன்னேரி எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ்சை அழிப்பதற்காக மகாத்மா காந்தியின் புகழை அழிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் மத்திய பாஜக அரசின் அவலநிலையை எடுத்துரைக்கும் வகையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ராமராஜ்ஜியத்தை விரும்பியவர் காந்தி. குண்டு பாய்ந்து உயிரிழக்கும் தருவாயிலும் ஹேராம் என கூறிய மகாத்மா காந்தியே உண்மையான ராம பக்தர் என்றார்.

நள்ளிரவில் நகைகளுடன் அலங்காரம் செய்து கொண்டு ஒரு பெண் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதே ராமராஜ்ஜியம் என காந்தி எண்ணினார். தற்போதைய பாஜக ஆட்சியில் இதுபோல பெண் சுதந்திரமாக நடக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காங்கிரஸ் கட்சியினால் மட்டுமே உண்மையான ராமராஜ்ஜியத்தை வழங்கிட முடியும். மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியவர்கள் கோட்சேவை கொண்டாடுகிறார்கள் என சாடினார்.

அரசியல் ஆதாயத்திற்காக ராமர் கோவிலை அவசர அவசரமாக திறந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். காந்தியை இழிவாக பேசுவது இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இழிவானது. காந்தியை இழிவாக பேசிய ஆளுநருக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றார். இந்தியாவில் காங்கிரெஸ்ஸை அழிக்க காந்தியடிகளின் புகழை திட்டமிட்டு அழிக்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.

Similar News