பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக மீனவர்களிடையே மோதல்
பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது.;
பழவேற்காடு ஏரியில் நேற்று இரு தரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கூனங்குப்பம் 13மீனவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்கள் மற்றும் ஆண்டிக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம், கோட்டைக்குப்பம் உள்ளிட்ட 12கிராம மீனவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மற்றும் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு கட்டைகளால் தாக்கி கொண்டதில் நடுவூர்மாதாகுப்பம் மீனவர்கள் 6 பேர் காயம் அடைந்து பழவேற்காடு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் மீனவர்களை கைது செய்ய வலியுறுத்தி பழவேற்காட்டில் 3கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் இணைந்து மீனவர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமரச பேச்சுவாத்தையின்போது தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் பழவேற்காடு ஏரியில் மோதலில் ஈடுபட்டதாக கொலை முயற்சி உள்ளிட்ட 7பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கூனங்குப்பம் மீனவர்கள் 13பேரை கைது செய்துள்ளனர். பழவேற்காட்டில் மேலும் அசம்பாவித சம்பவங்களை நடைபெறாமல் தவிர்க்கவும் பதற்றத்தை தணிக்கவும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.