சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார்; பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பு

பொன்னேரி பகுதியில், பள்ளி தலைமை ஆசிரியை, சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார் கூறி, பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், புறக்கணித்தனர்.

Update: 2022-11-30 01:15 GMT

சார் ஆட்சியரிடம் முறையிட்ட கிராம மக்கள்.

பொன்னேரி அருகே, அரசுப்பள்ளியில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக கூறி, பழங்குடியின மாணவர்கள் 19 பேர், 2வது நாளாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். கிராமத்திற்கு வந்த சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு செய்ததை அடுத்து, வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த தத்தைமஞ்சி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இயங்கி வரும் இந்த பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள லட்சுமி அம்மன் நகரில் வசித்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த 19மாணவர்கள் இந்த அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை, பழங்குடியின மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் 2வது நாளாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடி மாணவர்களை பங்கேற்க விடாமல் புறக்கணித்து வருவதாகவும், மாணவர்களை வகுப்பிலும் சாதிய ரீதியிலும் பாகுபாடு காட்டி வருவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியை, மாணவர்களை பாகுபாடு காட்டுவதாக கூறி 2வது நாளாக 19 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, அந்த கிராமத்திற்கு வந்த பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் பள்ளியில் மாணவர்களுக்கு நடைபெறும் சாதிய பாகுபாடு குறித்து மக்கள் முறையிட்டனர். பழங்குடியின மாணவர்கள் 2வது நாளாக பள்ளிக்கு செல்லாமல் இருப்பது குறித்து சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் பள்ளியில் எந்த விதமான சாதிய பாகுபாடுகளும் காட்டப்படுவதில்லை எனவும் அனைத்து மாணவர்களும் சமமாக கல்வி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

Similar News