சொத்து தகராறு விவகாரத்தில் பெண்களை தாக்கிய திமுக கவுன்சிலர் மீது புகார்
பெண்களை சாரமாரியாக தாக்கியதாக திமுக கவுன்சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஆலடு பகுதியில் காயத்ரியின் அப்பாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ்தளத்தை கடந்த 2019ம் ஆணடு முதல் தன் அப்பாவின் தங்கை நந்தினி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 05.02.23 அன்று தங்கள் வீட்டை அவர்கள் காலி செய்து விட்டனர். ஆனாலும் வீட்டு சாவி தர மறுத்து வந்ததாகவும் சாவியை கேட்டதற்கு பொன்னேரி நகராட்சியின் 17 வது வார்டு திமுக கவுன்சிலரும் காயத்ரியின் சித்தப்பா இளங்கோ மற்றும் காயத்ரியின் அத்தைகள் நந்தினி, நாகம்மாள் மற்றும் வழக்கறிஞர் ஹரிஹரன் சுரேஷ்குமார் ஆகியோர் காயத்திரி மற்றும் அவரது உறவுக்கார பெண்களை சரமாரியாக தாக்கும் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட காயத்ரி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், காவல்துறையினர் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்சனையில் உறவுக்கார பெண்களை பொன்னேரி நகராட்சி திமுக 17 வது வார்டு கவுன்சிலர் இளங்கோ மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டோர் பெண்களை சரமாரியாக தாக்கும் சம்பவம் பொன்னேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.