மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி
பழவேற்காடு கடற்கரையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தினர் .
பொன்னேரி அருகே பழவேற்காடு கடற்கரையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையே சேவை என்ற நோக்கில் ஸ்வச்சதா ஹைசேவா என்ற இயக்கத்தை அக்டோபர் முதல் தேதி நாடு முழுவதும் காலை 10 மணி முதல் 11 மணி வரை நடத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.
இந்த அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் நேற்று காலை மத்திய அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி புது டெல்லியில் துடைப்பத்தை கையில் எடுத்து தூய்மை பணிகள் செய்தார். இதே போல பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் தூய்மை பணிகளை செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பழவேற்காடு கடற்கரையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருடன் இணைந்து பழவேற்காடு கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியின் போது சுற்றுலா பயணிகள் வீசி சென்ற காகிதங்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவற்றை கோணிப்பைகளில் சேகரித்தனர். தொடர்ந்து கடற்கரையில் சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை லைட் ஹவுஸ் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், குப்பை கழிவுகளை கடற்கரையில் கொட்டாமல், குப்பை தொட்டிகளில் மட்டுமே போட்டு கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டி கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.