சித்ரா பௌர்ணமி: சிறுவாபுரிக்கு காவடி,பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 31.ஆம் ஆண்டாக சிறுவாபுரிக்கு காவடிகள்,பால்குடம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறுவாபுரிக்கு காவடிகள்,பால்குடம் சுமந்து வந்து பக்தர்கள் 31-ம் ஆண்டாக நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சின்னம்பேடு சிறுவாபுரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தொடர்ச்சியாக 6 செவ்வாய்க்கிழமை நாட்களில் கோவிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை,பவளக்காரத் தெருவில் இருந்து நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை சங்கத்தின் சார்பாக 31-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 15 பக்தர்கள் காவடிகள் சுமந்தும்,101 பக்தர்கள் பால்குடம் சுமந்தும் நேற்று காலை சிறுவாபுரிக்குபுறப்பட்டனர். புழல் சிவன் கோவிலுக்கு காலை 9 மணிக்கு வந்து ஓய்வு எடுத்தனர்.பின்னர்,மாலை புறப்பட்டு பஞ்செட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கினர்.
இன்று விடியற்காலை புறப்பட்டு சிறுவாபுரியில் உள்ள அன்னதான மண்டபத்திற்கு வந்தனர்.பின்னர்,அங்கிருந்து சிறுவாபுரியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக மங்கள வாத்தியம் செண்டை மேளம் முழங்க கோவிலுக்கு வந்தனர். பின்னர்,பக்தர்கள் மற்றும் காவடியில் கொண்டு வந்த பால்,தயிர்,பன்னீர் உள்ளிட்டவைகளை உற்சவருக்கு அபிஷேகம் செய்தனர்.இதன் பின்னர்,உற்சவருக்கு பூக்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பித்தனர்.இதன் பின்னர், அன்னதான மண்டபத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை குழு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.