பொன்னேரியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
பொன்னேரியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
திருட்டு நடைபெற்ற செல்போன் கடை.
பொன்னேரியில் இரண்டு செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த செல்போன்கள் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஹரிஹரன் கடைவீதியில் முகமது யூசுப் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று கடையை திறந்து வியாபாரம் முடித்துவிட்டு நேற்று இரவு கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.கடையிலிருந்த மூன்று புதிய செல்போன்களையும் வாடிக்கையாளர்கள் பழுது பார்ப்பதற்காக கொடுத்திருந்த சில செல்போன்களையும் திருடி சென்றுள்ளனர்.இவற்றின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதேபோல் தேரடியில் உள்ள சந்தோஷ் என்பவரின் செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சி.சி.டி.வி .கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் விரல் ரேகைகளையும் விரல் ரேகை நிபுணர்கள் பதிவு செய்து உள்ளனர்.
ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரியின் மையப்பகுதியில் குறிப்பாக கடைவீதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியவல்லை. மின் விளக்குகள் எரியாததே இந்த திருட்டு சம்பவங்களுக்கு காரணம் என வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.