மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தனியார் கல்லூரி ஊழியர் பலி
கன்னிகைபேர் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தனியார் கல்லூரி ஊழியர் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் குப்பம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (46). இவர் கண்ணிகைபேர் கிராமத்தில் உள்ள ஏ.என்.என் கல்லூரியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று கன்னிகைபேர் கிராமத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தனசேகரன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கன்னிகைபேர் பஜார் வீதியில் வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும் மினி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் தனசேகரன் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனசேகரன் இன்று காலை பரிதாபமாக பலியானார்.
இந்த விபத்து குறித்து பெரியபாளையம் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மினி வேனை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவான டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர் .பலியான தனசேகருக்கு சுப்ரியா (35) என்ற மனைவியும் விஷ்ணு (11) மாதவன் (7) என்ற மகன்கள் உள்ளனர்.