மோசமாக சேதமடைந்த சாலைகள்; லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

பொன்னேரி அருகே மோசமாக சேதமடைந்த சாலையில் கனரக லாரிகளை இயக்கக் கூடாது என லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-08-21 03:45 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ( மாதிரி படம்)

பொன்னேரி அருகே கனரக லாரிகளால் சாலை மோசமடைந்ததை கண்டித்து குவாரி லாரிகள் சிறை பிடிக்கப்பட்டது. சாலையை சீரமைத்து பிறகு கனரக வாகனங்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் சாலை பணிகளுக்காக சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இந்த ஏரியில் இருந்து 100கணக்கான லாரிகளில் சவுடு மண் ஏற்றி செல்லப்படுகிறது. பொன்னேரியில் இருந்து தடப்பெரும்பாக்கம் வழியே சங்கிலிமேடு, வடக்குப்பட்டு, ஆமூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் அதிகளவில் லாரிகள் செல்வதால் ஏற்கனவே சேதமடைந்திருந்த சாலை தற்போது முற்றிலுமாக மண் சாலையாக மாறியது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து வடக்குப்பட்டு பகுதியில் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துடன் சாலையில் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் பள்ளி செல்லும் மாணவ - மாணவிகள் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக லாரிகளில் உயிர் பயத்துடன் சாலையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சாலை என்பதால் உடனடியாக பிடிஓ மூலம் சாலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்கள் போராட்டம் காரணமாக குவாரிக்கு செல்லும் லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News