வழுதிகைமேடு கிராமத்தில் வடமாநில வாலிபர் கொலை வழக்கில், கைதான கணவன், மனைவி விடுதலையா, பரபரப்பு தகவல்

வழுதிகைமேடு கிராமத்தில் பாலியல் பலாத்கார முயற்சியின்போது வட மாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவன், மனைவி விடுவிக்கப்பட உள்ளதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-07-17 12:22 GMT
பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வழுதிகை மேடு கிராமத்தில் மணி என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணை உள்ளது. இங்கு திருவலங்காடு பகுதியை சேர்ந்த பூங்காவனம் (28), அமுதா (21) தம்பதியர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி பூங்காவனம் பண்ணை பணிகளை கவனித்துக் கொண்டிருந்த நிலையில் அமுதா அங்குள்ள குடிசையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அமுதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் அமுதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பூங்காவனம் அந்த மர்ம நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த மர்ம நபர் உயிரிழந்தார

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பாபு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பூங்காவனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அமுதா பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மர்ம நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இரு புகார்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தற்காப்புக்காக நடைபெற்ற போராட்டத்தின் போது மர்ம நபர் உயிரிழந்ததால் இந்த வழக்கிலிருந்து அரசியலமைப்பு சட்டம் பிரிவு 100ன் கீழ் கணவன் மனைவி இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே இதே போன்று கடந்த ஆண்டு சோழவரம் காவல் எல்லைக்குட்பட்ட அருமந்தை கிராமத்தில் மறைவிடம் சென்ற பொழுது தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் இளம் பெண்ணை காவல்துறையினர் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இந்த மர்ம நபர் கொலை வழக்கில் கணவன்-மனைவி இருவரையும் விடுவிப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவரையும் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

Tags:    

Similar News