பொன்னேரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில குழு கூட்டம்

பொன்னேரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில குழு கூட்டம் சின்னத்துரை எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.;

Update: 2023-06-06 04:42 GMT

பொன்னேரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது.

விவசாய தொழிலாளர்களுக்கென தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும், நகர்ப்புற பகுதிகளில் விளிம்பு நிலை மக்களுக்கு 100நாள் வேலையை வழங்கிட வேண்டும் என பொன்னேரியில் நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில குழு கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவரும், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வுமான சின்னத்துரை வலியுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய துணை செயலாளர் சிவதாசன், மாநில தலைவர் சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவரும், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வுமான சின்னத்துரை கூறியதாவது:-

100நாள் வேலை திட்டத்தை இந்தியா முழுவதும் சிதைக்க கூடிய கொடுமையான நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. நிதியை குறைத்து வேலையை அதிகரித்து டிஜிட்டல் முறையை ஒன்றிய அரசு கொண்டு வந்து சித்திரவதை செய்ய கூடிய சூழல் அதிகரித்திருக்கிறது. வேலை முடிந்தவுடன் ஊதியம் வழங்காமல் இந்த திட்டத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 100நாள் வேலை திட்டத்தை 180நாட்களாக உயர்த்தி 300ரூபாய் ஊதியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்டு நிதி பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. முறையாக 100நாள் வேலை வழங்கி விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்.

நகர்ப்புற பகுதிகளில் 100நாள் வேலையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் 2021 - 22ஆம் நிதியாண்டில் 100கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.அடுத்த இரண்டாண்டுகள் நிதி ஒதுக்கப்படவில்லை .நகர்ப்புற பகுதிகளில் விளிம்பு நிலை மக்கள் வசிக்கக்கூடிய இடத்தில வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட தேதி உறுதி செய்யப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 47லட்சத்து 5ஆயிரம் குடும்பத்தினர் வீட்டு மனை கோரிஉள்ளனர்,.2023க்குள் 5லட்சத்து 9ஆயிரம் வீடுகள் கட்டி கொடுப்பதாக அரசு கூறியதாகவும், அனால் இன்றைய தேதி வரை 2லட்சத்து 8ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் வீடுகள் காட்டாத காரணத்தால் 1515கோடி ரூபாயை ஒன்றிய அரசு தர மறுத்துள்ளது. மேலும் 30ஆண்டுகளுக்கு முன் பல்வேறு திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள் சிதிலமடைந்துள்ளது. அவற்றை அரசு புதுப்பித்து தர வேண்டும்.

நீர்நிலை புறம்போக்கு, கோவில் புறம்போக்கு என்ற காரணத்தால் குடிமனை பட்டா வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது. குடிமனை பட்டாவும், வீடும் வழங்கிட வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்கிட வேண்டும்.  விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி நிர்ணயம் செய்ய வேண்டும்.  இன்றைய விலைவாசி உயர்விற்கு ஏற்ப கூலி நிர்ணயம் செய்யப்படவேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு என தனித்துறை ஏற்படுத்திட வேண்டும்.விவசாய தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News