பொன்னேரி அருகே அகத்தீஸ்வரர் கோவில் மதில் சுவர் புனரமைப்பு பூமி பூஜை
பொன்னேரி அருகே பஞ்செட்டி அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் மது சுவர் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
பொன்னேரி அடுத்த பஞ்செட்டி அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் மதில்சுவர் புனரமைப்பு பணிகளுக்காக பூமிபூஜை நடத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த பஞ்செட்டி ஊராட்சியில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அகத்திய மாமுனிவர் இங்கு வந்து ஈஸ்வரனை போற்றி பாடியதால் இந்த கோவிலுக்கு அகத்தீஸ்வரர் கோவில் என பெயர் வந்ததாகவும் ராஜராஜ சோழன் காலத்தில் இக்கோவில் எழுப்பப்பட்டதாகவும் தலவரலாறு மூலம் அறிய முடிகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலின் மதில் சுவர் சில இடங்களில் சேதமடைந்ததை தொடர்ந்து மதில் சுவர் புனரமைப்பதற்காக இன்று பூமிபூஜை செய்யப்பட்டது.முன்னதாக கோபூஜையையும் சக்திவாய்ந்த கணபதி பூஜையையும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதி நடத்தி வைத்தனர்.இதனை தொடர்ந்து பூர்ணாஹதி செய்யப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து பூஜிக்கப்பட்ட செங்கற்களை பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி கொண்டுவர மதில் சுவர் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.இதில் கோவில் நிர்வாக அலுவலர் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.