சிறுவாபுரி முருகன் கோவில் அருகே சாலையோர கடைகளை அகற்றுவது குறித்து ஆலோசனை
சிறுவாபுரி முருகன் கோவில் அருகே சாலையோர கடைகளை அகற்றுவது குறித்த ஆலோசனை நடைபெற்றது.;
ஆலோசனை கூட்டத்தில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
பொன்னேரி அருகே பிரசித்திபெற்ற சிறுவாபுரி முருகன் கோயில் முன்பு சாலையோர கடைகள் அகற்றுவது குறித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்திப்பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிசேகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இங்கு வந்து முருகனை தரிசிப்பவர்கள் நினைத்த காரியம் கை கூடுவதால் பக்தர்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.பக்தர்கள் செவ்வாய்க்கிழமைகள் மற்றும் கிருத்திகை நாட்களில் அதிகளவு குவிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அப்போது சாலையோரம் உள்ள கடைகளாலும், கோயிலை சுற்றிலும் ஏராளமான சிறு கடைகளால் போக்குவரத்து ஒருபுறம் பாதிக்கப்படும் நிலையில், மறுபுறம் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனையடுத்து சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனைதொடர்ந்து சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோரது தலைமையில், காவல்துறையினர், சாலையோர வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் பக்தர்களின் வசதிக்காக சாலையோர கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு மாற்று இடத்தில் கடைகள் வைக்க அறிவுறுத்தினார். அப்போது வியாபாரிகள் தரப்பில் இருக்கும் இடத்திலேயே பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு வியாபாரம் செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமைகள் மற்றும் விசேஷ நாட்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக பொன்னேரி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் மற்றும் வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.