பொன்னேரியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
பொன்னேரியில் அ.தி.மு.க .சார்பில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பங்கேற்றார்.
சேரி என்பது சுத்தமான தமிழ் சொல் தானே, குஷ்பு எந்த நோக்கத்தில் கூறினார் என தமக்கு தெரியாது என பொன்னேரியில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்து கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்கள், பொறுப்பாளர்களின் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன் அ.தி.மு.க.விற்கும், கே.சி.பழனிசாமிக்கும் அணுவளவும் தொடர்பில்லை என்றும் இவர் இயக்கத்திலேயே இல்லாததால் அவர் தொடுத்த வழக்கை அ.தி.மு.க.பொருட்படுத்தவே இல்லை என தெரிவித்தார்.
மேலும் தி.மு.க. ஊழல்கள், கொள்ளைகளை, மருமகன் மூலம் நடைபெறும் ஊழல், உணவு பொருட்களை லாரி, லாரியாக வடநாட்டில் வாங்கி வந்து கொள்ளையடிக்கிறார்கள் என்பது குறித்து அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார் என்றார். எடப்பாடி ஆட்சியில் 20ரூபாய்க்கு விற்ற பூண்டு ஸ்டாலின் குடும்பம் 20ரூபாய்க்கு வாங்கி வந்து 80ரூபாய்க்கு விற்று கொள்ளையடிக்கிற தொழிலால் விலைவாசி விஷம் போல உயர்ந்துள்ளதாக சாடினார்.
தடுப்பணைகளை கட்டி சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை அ.தி.மு.க. ஆட்சியில் போக்கினோம். தி.மு.க. ஆட்சியில் அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு கொள்ளையடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு சேரி என குறிப்பிட்ட பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த பொன்னையன் சேரி என்பது சுத்தமான தமிழ் சொல் தானே, குடியிருக்கிற பகுதி, வேளச்சேரி என ஒன்று உள்ளதே, ஸ்டாலின் பங்களாக்களை கட்டி கொண்டு அங்கு குடியிருக்கிறார், அதனை எப்படி கூறுவது என்றும், குஷ்பு எந்த நோக்கத்தில் கூறினார் என தமக்கு தெரியாது என்றும் இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.