சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்
பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் ஏந்தி வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு கட்டுதல், திருமண தடை நீங்குதல் ரியல் எஸ்டேட், அரசியல் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற திருக்கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இன்று ஆடி கிருத்திகை என்பதால் அதிகாலை முதல் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, பன்னீர், மஞ்சள், தேன், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், பெரியபாளையம், ஆரம்பாக்கம், மீஞ்சூர், சோழவரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும், பால்குடம் ஏந்தியும், வைஷ்ணவி அம்மன் கோயில் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் சிவன் கோவில் வழியாக அரோகரா முழக்கத்துடனும், காவடியாட்டத்துடன், தலையில் பால் குடங்களை சுமந்தபடி திருவீதி உலா வந்த பக்தர்கள் கோவிலில் வீற்றிருக்கும் உற்சவருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
பின்னர் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோவிக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம்,பிரசாதம், குடிநீர், உள்ளிட்ட ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் செந்தில்குமார் சிறப்பாக செய்திருந்தார். மேலும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில ஈடுபட்டு வருகின்றனர்.