முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா கோலாகலம்

குண்ணமஞ்சேரி முத்து மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் பெண்கள் வேப்பஞ்சேலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-08-19 02:45 GMT

குண்ணமஞ்சேரி கிராமத்தில் முத்து மாரியம்மன் ஆலய ஆடித்திருவிழா நடந்தது. பெண்கள் வேப்பஞ்சேலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொன்னேரி அருகே குண்ணமஞ்சேரி கிராமத்தில் முத்து மாரியம்மன் ஆலய ஆடித்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த குண்ணமஞ்சேரியில் சுமார் 300ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிமாத 5 வது வார திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


விழாவின் முதல் நிகழ்வாக கைலாய வாத்தியம் இசைக்க மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ கரகம் சுமந்த சாமியாடி கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தார்.இதனை தொடர்ந்து விழாவின் சிறப்பம்சமான வேண்டுதல் வைத்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பக்தர்கள் புனித நீராடி உடல் முழுவதும் வேப்பஞ்சேலை அணிந்து கோவில் சுற்றி மூன்று முறை வளம் வந்து பின்னர் நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


விழாவின் நிறைவாக முத்து மாரியம்மனுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் ஜவ்வாது தேன் உள்ளிட்ட நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும், அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருத்தேரில் மகிஷாசுரமர்த்தினி அவதாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கு குங்குமம்,மஞ்சள், அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Similar News