பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞர்
பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞர் மீட்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு மந்தகதியில் நடைபெற்று வருகிறது. 2021க்குள் நிறைவடைய வேண்டிய இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ராட்சத பள்ளங்களால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலைகளில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களால் இருசக்கர வாகனங்களில் மட்டுமல்ல நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ. நகரில் உள்ள இளங்கோ தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் அந்த பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது ராட்சத பள்ளம் நீர் நிறைந்து தெரியாத காரணத்தால் நிலைகுலைந்து பத்தடி பள்ளத்தில் விழுந்தார். பள்ளத்தில் விழுந்து தத்தளித்த அந்த இளைஞரை அங்கிருந்த சிலர் ஓடி வந்து மீட்டனர். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இதனை தொடர்ந்து ஜே.சி.பி. இயந்திரத்தை கொண்டு சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த இளைஞர் வந்த இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.
பொன்னேரியில் மக்களை பயமுறுத்தும் வகையில் உள்ள பள்ளங்களை மூட குடிநீர் வடிகால் வாரியமும் நகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.