ஆரணி பேரூராட்சியில் வரி வசூல் செய்ய சென்ற ஊழியர்களை தடுத்த பெண் கைது
ஆரணி பேரூராட்சியில் வரி வசூல் செய்ய சென்ற ஊழியர்களை தடுத்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
பொன்னேரி அருகே ஆரணி பேரூராட்சியில் வரி வசூல் செய்ய சென்ற பேரூராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளில் நிலுவையாக உள்ள சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்ட இனங்கள் தற்போது தீவிரமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் உள்ளாட்சி அமைப்புகளில் கடை நடத்துவோரின் வாடகையும் தீவிரமாக வசூலிக்கப்படுகிறது.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் பணியாற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வழக்கம் போல குடிநீர் வரி, சொத்து வரி வசூலித்து வந்தனர். இந்நிலையில் நாகலட்சுமி என்ற பெண் நீண்ட நாளாக வரிகள் கட்டுவதில்லை என்று தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 19ம்தேதிபேரூராட்சி ஊழியர்கள் வரி வசூலிக்க சென்றபோது ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வரி வசூலிக்க வந்த பேரூராட்சி ஊழியர்களிடம் நாகலட்சுமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களுடன் பேரூராட்சி அதிகாரிகள் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் மிரட்டியது உள்ளிட்ட 3பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வந்தனர். கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நாகலட்சுமியை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.