பொன்னேரி அருகே மீனவ கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்
பொன்னேரி அருகே மீனவ கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.;
பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட அதானி துறைமுக ஒப்பந்த ஊழியர் மன உளைச்சலில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி காட்டுப்பள்ளி மீனவ கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலில் விழுந்து காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, காட்டுப்பள்ளி பகுதியில் துறைமுக விரிவாக்கத்திற்காக கடந்த 2009-இல் காட்டுப்பள்ளி மீனவ கிராமத்தை சேர்ந்த 140 பேருக்கு தற்காலிக பணி வழங்கப்பட்ட நிலையில், பணி நிரந்தரம் கோரி பல முறை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இந்த நிலையில் அதானி துறைமுகத்தில் இருந்து 12 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதில் மன உளைச்சலில் இருந்த மீனவர் நித்யா(34) என்பவர் கடலில் விசை படகு மூலம் மீன் பிடிக்க சென்ற போது, கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி துறைமுக வாயிலின் முன்பு காட்டுப்பள்ளி மீனவ கிராம மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வடசென்னை அனல் மின் நிலையம் முதல் பழவேற்காடு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுமார் 3 மணி நேரம் போராட்டம் நடைபெற்ற நிலையில் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.காணாமல் போன மீனவரை தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும், துறைமுக நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.