சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளில் திடீர் தீ
மீஞ்சூர் அருகே தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளில் திடீர் தீ பிடித்து விபத்து ஏற்பட்டது.
மீஞ்சூர் அருகே கொண்டக்கரையில் தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிந்த தீயை 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான சரக்கு பெட்டகம் முனையம் இயங்கி வருகிறது. மருந்து, உணவுப்பொருள், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும், பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படக்கூடிய சூழலில் துறைமுகத்திற்கு செல்லக்கூடிய இந்த கண்டெய்னர் பெட்டிகள் இந்த சரக்கு பெட்டகம் நிலையத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன.
இந்த சூழலில் சரக்கு பெட்டக முனையத்தின் பின்புறத்தில் மரக்கட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த மரக்கட்டைகளில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்து இருக்கிறது. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் செங்குன்றம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மரக்கட்டைகளை கிளறி அடிப்பகுதியில் மீண்டும் தீப்பற்றாமல் முற்றிலுமாக தீயை அணைக்கும் பாதுகாப்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை மரக்கட்டைகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.