பொன்னேரி அருகே கடல் அரிப்பால் மணல் திட்டுகளாக மாறிய சாலை

பொன்னேரி அருகே கடல் அரிப்பால் மணல் திட்டுகளாக மாறிய சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.;

Update: 2023-01-06 09:49 GMT

பொன்னேரி அருகே கடல் அரிப்பினால் மணல் திட்டுகளாக மாறிய சாலையில் வாகனத்தில் செல்ல முடியாமல் அவதிப்படும் வாகன ஓட்டிகள்.

பொன்னேரி அருகே கடல் அரிப்பு காரணமாக பாலைவனமாக மாறிய பழவேற்காடு, சாலையில் பரவிய மணல் திட்டுக்களால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இதனை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் கடந்த மாதம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் தொடர் மழை காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் உப்பங்கழி ஏரியை கடந்து கடல்நீரானது லைட் ஹவுஸ், துறைமுகம் இடையே செல்லும் ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை மூழ்கடித்தது.

இதில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த பின்னர் கடல் நீரானது உள்வாங்கி இயல்பு நிலை திரும்பிய போதும் கடல் நீருடன் அடித்து வரப்பட்ட மணலானது சாலை முழுவதும் பரவி உள்ளது. இதனால் துறைமுகச்சாலை பாலைவனம் போல் காட்சியளிக்கிறது .இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் இருசக்கர வாகனங்கள் மணல் திட்டில் சிக்கிக் கொள்வதால் வாகனத்தை இயக்க முடியாமல் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தள்ளிக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையில் ஆக்கிரமித்துள்ள கடல் மண் திட்டுகளை உடனடியாக அகற்றி சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதனை கண்டுகொண்டு சாலையில் ஆக்கிரமித்துள்ள மணல் திட்டுகளை அகற்றி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பகுதி மக்கள் சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News