குளம் தூர்வாரும்போது 2.5 அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு
பொன்னேரி அருகே குளம் தூர்வாரும் பணியின் போது 2.5அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, பெரிய கரும்பூர் கிராமத்தில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குளத்தை கிராம மக்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த பணிகளின் போது குளத்தில் இருந்து சுமார் 2.5அடி உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்குள்ள கிராம தேவதையான பொன்னியம்மன் கோவிலில் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலையை வைத்து கிராம மக்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிலையை பார்வையிட்டு விசாரணையில் ஈடுபட்டனர். சிலையை அதிகாரிகள் அரசு கருவூலத்தில் வைக்க கொண்டு செல்வதாக கூறினர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தங்களது கிராமத்தின் கோவிலிலேயே அம்மன் சிலை வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட வேண்டும் என கூறி கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு தூர்வாரும் பணியின் போது பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை மீட்கப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.