பெரியபாளையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது
பெரியபாளையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட 6 பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.
பெரியபாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி காவல்துறையினர் பஜார் ஆரணி உள்பட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 3 இருசக்கர வாகனங்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்கள்.
அவர்களிடம் போலீசார் சோதனை நடத்திய போது கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி அவர்கள் விற்பனை செய்வதற்காக வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த சபியுல்லா, பிரவீன், விக்னேஷ், முனுசாமி, கார்த்திக், வெங்கடேசன் ஆகிய 6பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகவும் இதேபோல் குட்கா, ஹான்ஸ், ஸ்கூல் லீப் உள்ளிட்ட போதைப் பொருட்களும் விற்பனை கடைகளில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் தமிழக அரசு புகையிலை குட்கா பொருட்களை தடை செய்த போது பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களும் இப்பழக்கத்தில் இருந்து சற்று விடுபட்டனர். எனவே மீண்டும் இதே சட்டத்தை கொண்டு வந்து கஞ்சா, மற்றும் புகையிலை விற்பனை செய்பவர்களை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.