தேவத்தம்மன் ஆலயத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்
பொன்னேரி தேவாத்தம்மன் ஆலயத்தில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
பொன்னேரி தேவத்தம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று பால் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட தேவத்தம்மன் நகரில் மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு தேவத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த ஆடிி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
சிறப்பு பூஜையுடன் லட்சுமி அம்மன் கோவில் வளாகத்திலிருந்து பூசாரி காஞ்சனம்மா தலைமையில் துவங்கிய ஊர்வலத்தில் மஞ்சளாடை அணிந்து விரதமிருந்த 108 பெண்கள் பங்கேற்று தலையில் பால்குடம் சுமந்து மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்தனர். இதனை தொடர்ந்து தேவத்தம்மனுக்கு பெண்கள் கொண்டு வந்த பாலை கொண்டு பாலாபிஷேகம் செய்து பெண்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவின் நிறைவாக தேவத்தம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.