நாகமல்லீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம்
பொன்னேரி அருகே நாகமல்லீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த நாலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ நாகமல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி சதுர்த்தி திதி, உத்திராட நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து யாகம் நடத்தி வலம்புரி சங்கு அர்ச்சனை செய்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலசத் தீர்த்தத்தை மேள தாளங்கள் முழங்க சிரசில் தாங்கி ஆலயத்தை வலம் வந்து, சொர்ணாம்பிகை தாயாருக்கும் நாகமல்லீஸ்வரருக்கும் 108 வலம்புரி சங்காபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து தீப, தூபா ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.