ஆரணியாற்றில் உடைந்த தரைப்பாலம் சீரமைப்பு
- இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தற்காலிக தரைப்பாலம் உடைந்தது. 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்தின் அருகில் புதிதாக மாற்று தரைப்பாலம் போடப்பட்டது. ஆனால், தற்போது பெய்த மழையால் அந்தக் தரைப்பாலமும் வெள்ள நீரால் உடைந்தது. இதனையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஆபத்தான முறையில் உயர்மட்ட மேம்பாலத்தை போக்குவரத்துக்காக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
இந்த நிலையில் ஆரணியாற்றில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்தின் மீது ஏறி செல்ஃபி எடுத்த போது ஒரு கல்லூரி மாணவன், இளைஞர் ஒருவர் என 2 பேர் உயர்மட்ட மேம்பாலத்தின் அருகில் இருந்த உயர் மின் அழுத்த கம்பி பட்டு, மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைதொடர்ந்து பொது மக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதால், நெடுஞ்சாலை துறையினர், உடைந்த தரைப்பாலத்தை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சீரமைத்து இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளித்துள்ளனர்.