ஊழல் குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லையென பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதா தொடர்பான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் இல.கணேசனிடம், ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அமைச்சர்கள் மீது அளித்துள்ள ஊழல் புகார் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் இது போன்ற பிரச்சனைகளை எழுப்புவார்கள் .
தங்கள் மீதான ஊழல்கள் வெளியில் வரக் கூடாது என்பதற்காகவே மு.க ஸ்டாலின் புகார் அளித்துள்ளதாகவும் ஊழலைப் பற்றி பேச திமுக தலைவர்களுக்கு அருகதை இல்லை என்றும் சாடினார்.யார் முதலமைச்சர் வேட்பாளர், யாருடன் கூட்டணி என்பதையெல்லாம் கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக உடனான கூட்டணி தொடர்வதாகவும் இல.கணேசன் தெரிவித்தார்.