இளைஞர் தீக்குளிப்பு சம்பவம்: வட்டாட்சியர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம்

கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து இளைஞர் தீக்குளித்தது தொடர்பாக வட்டாட்சியர் உள்பட 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2024-07-06 11:39 GMT

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வழி ஊராட்சி நேதாஜி நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவரது இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகளான கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா, காவல்துறை உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற சென்றனர்.

அப்போது இடத்தின் உரிமையாளர் ராஜ்குமார் என்ற இளைஞர் தனக்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்குமாறு கெஞ்சியதாக தெரிகிறது. இதற்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி அகற்ற உத்தரவிட்டார்.

இதை ஏற்க மறுத்த ராஜ்குமார் சமையல் செய்வதற்கு வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்துக்கொண்டு எரிச்சல் தாங்க முடியாமல் சாலையில் அங்கும் இங்குமாய் ஓடினார்.

இதை அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக ரசாயன கலந்த கலவை மூலம் அந்த வாலிபர் மீது பீய்ச்சி அடித்த தீயை அணைத்தனர்.

உடனடியாக அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கே.எம்.சி மருத்துவமனையில் பலத்த தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அனைத்து சமூக ஊடங்களிலும் பரவியதும் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கண்டனத்தை தெரிவித்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்  நேதாஜி நகரில் உள்ள புஞ்சை நிலம் ஆஷா என்ற பெயரில் பட்டா உள்ளதாகவும் 40 வருடங்களுக்கு முன்பு பதிவு பெறாத வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு அப்போது வருவாய் துறை வரைபடத்தில் நடைபாதை என்பது இருப்பதாகவும் கடந்த காலங்களில் வர்தா புயல்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களை மேற்கண்ட ஆக்கிரமிப்பு உள்ள இடம் பெரிதும் இடையூறாக இருந்து வந்துள்ளது.

இது சம்பந்தமாக வருவாய்த்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டு இரண்டு முறை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் வருகின்ற மழைக்காலத்தில் மேற்கண்ட ஆக்கிரமிப்பு உள்ள இடம் பெரிதும் இடையூறாக உள்ளது என மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்ததாக கூறியுள்ளனர் .

அதன் அடிப்படையில் நேற்று வருவாய்த்துறை, காவல்துறை மின்வாரியத்துறை ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி மூலம் அகற்ற முயன்றனர். அப்போது ராஜ்குமார் என்ற வாலிபர் கதவை சாற்றிக்கொண்டு உ்டலில் மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக்கொண்டு எரிந்த நிலையில் இருந்துள்ளதைகண்ட போலீசார் கதவை உடைத்த போது வெளியே அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த போது தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் கே. எம். சி. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக கவனக்குறை செயல்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகியோரை பணியிட மாற்றம் செய்தும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் மற்ற அதிகாரிகள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News