தேர்தல் பறக்கும் படை சோதனையில் 18 கிலோ குட்காவுடன் சிக்கிய பெண்
கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் 18 கிலோ குட்காவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கவரப்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 18 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர். திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை, சத்தியவேடு சாலை, மாதர்பாக்கம், பூலாம்பேடு, பெருவாயில், ஆரம்பாக்கம்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த சோதனையில் பொதுமக்களுக்கு அன்பளிப்பு வழங்கக்கூடிய பொருட்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் பரிவர்த்தனை தடுப்பதற்கு ஒவ்வொரு வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கவரப்பேட்டை திருப்புமுனை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஹேமலதா தீவிரமாக கார்,பஸ்,லாரி, அரசு பேருந்து, தனியார் பேருந்துகளை நிறுத்தி திடீரென சோதனை மேற்கொண்டார்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ குட்கா போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக நெல்லூரில் இருந்து சென்னை செல்லும் தனியார் பேருந்தில் பயணித்த சென்னை திருவெற்றியூரை சேர்ந்த துர்கா ( வயது 29)என்ற பெண்ணிடம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது .
அத்தோடு அவர் கையில் வைத்திருந்த 36,000 ரூபாய் பணத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் துர்காவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.