பழுதடைந்த குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டியை அகற்ற கோரிக்கை

திருக்கண்டலம் கிராமத்தில் சாலை ஓரத்தில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

Update: 2023-01-31 05:15 GMT

சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் தேக்க மேல்நிலைத் தொட்டி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்டலம் கிராமத்தில் சுமார் 4000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருக்கண்டலம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்

இதனை அடுத்து இந்த மேட்டுப்பாளையம் கிராம மக்கள் குடிநீர் தேவைக்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க மேல்நிலைத் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு இதன் மூலம் பல பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது

தற்போது இந்த குடிநீர் தேக்க மேல் தொட்டியானது மிகவும் பழுதடைந்து, மேல் தளம் மற்றும் இதனைத் தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களும் பலவீனமடைந்து, சிமெண்ட் கான்கிரீட் உதிர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்தபடி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது


மேலும் இந்த குடிநீர் தொட்டிக்கு அருகாமையில் பழைய தொட்டிக்கு மாறாக புதிய குடிநீர் மேல் தொட்டி ஒன்று கட்டி அதன் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த பகுதியில் பழைய குடிநீர் மேல் தொட்டியானது சாலை ஓரத்தில் இருப்பதால், எந்த நேரத்திலும்  சரிந்து முறிந்து கீழே விழுந்தால் பெருமளவில் உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பழைய தொட்டி ஒன்று சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது பழுதடைந்ததால் இதற்கு  மாறாக வேறு ஒரு தொட்டி கட்டி அதன் மூலம் மக்கள் குடிநீர் வழங்கப்பட்டு  வருகிறது. சேதமான இந்த பழைய குடிநீர் மேல்நிலைத் தொட்டியை அகற்ற வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்

எனவே உடனடியாக இந்த பழைய தொட்டியை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News