கும்மிடிப்பூண்டி அருகே பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் பேருந்து சிறப்பித்து சாலை மறியலில் ஈடுபட்டனர.

Update: 2024-01-05 09:13 GMT

கும்மிடிப்பூண்டி அருகே கிராம மக்கள் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அருகே சாலை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தியும் சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சுண்ணாம்புகுளம் ஊராட்சிக்கு உட்பட்டது சக்திக்கல் தெரு. இந்த தெருவில் சுமார் 100க்கு மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 300 க்கு‌ம் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தெருவிற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.அந்த சாலை பழுதடைந்த நிலையில் தரமான சாலை அமைக்கவும், சாலையில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை நேரில் சென்று கோரிக்கை மனுக்கள் வழங்கியதையடுத்து. ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் பேவர் பிளாக் சாலை அமைக்க முன்னேற்பாடுகள் நடைபெற்றது.

ஆனால் தற்போது வரை ஆக்கிரமிப்புகள் அகற்ற ஏற்பாடுகள் நடைபெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஆனால் இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் இரவு நேரங்களில் மனித மலக்கழிவுகளை சாலையில் கழிப்பதால் அந்த சாலை வழியாக அப்பகுதி மக்கள் நடமாட முடியாமலும், துர்நாற்றம் வீசிய படியும் உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

தொடர் கோரிக்கைகளுக்கும், போராட்டங்களுக்கும் அரசு அதிகாரிகள் செவி சாய்க்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சுண்ணாம்பு குளம் - எளாவூர் சாலையில் செல்லும் 557- C, 90 ஆகிய இரண்டு அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், தொழிலாளர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தை கைவிட பொதுமக்கள் முற்றிலுமாக மறுத்து விட்டனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைவில் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News