ஆந்திர எல்லையில் போதை மாத்திரை கடத்தி வந்த இரண்டு இளைஞர்கள் கைது

ஆந்திர எல்லையில் போதை மாத்திரை கடத்தி வந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-11-22 05:57 GMT

கைது செய்யப்பட்ட இருவர்.

ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனை சாவடியில் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 420 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆரம்பாக்கம் அருகே தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து தமிழகம் வந்த ஆந்திர மாநிலப் பேருந்தை சோதனை செய்தபோது சந்தேகத்துக்கிடமாக பயணித்த இருவரை பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களது பையில் இருந்த 420 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் நெல்லூரை சேர்ந்த ரிஸ்வான் (19) இஸ்ராயில் (24) என்பதும் ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கும் போதை மாத்திரைகளை வாங்கி தமிழகத்தில் உள்ள பல பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரிய வந்தது.

இதையொட்டி அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக ஆந்திர மாநில எல்லையில் இதுபோன்று அடிக்கடி போதை மாத்திரை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை இலக்காக கொண்டு இந்த போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாக போலீசார் நடத்திய விவசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News