இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கிராம நிர்வாக அலுவலர், சிறுமி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கிராம உதவியாளர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.;

Update: 2023-03-10 01:45 GMT

உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ராஜசேகரன் (40) அண்மையில் வருவாய்துறையில் கிராம உதவியாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். மல்லியங்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் இவரது தங்கை புவனேஸ்வரி (34), தங்கை மகள் சபர்மதி (6) இருவரையும் ராஜேசகரன் தமது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தங்கை மகளை பள்ளியில் விடுவதற்காக வந்து கொண்டிந்த போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கிராம உதவியாளர் ராஜசேகரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்கை புவனேஸ்வரி, தங்கை மகள் சபர்மதி இருவர் மீதும் லாரி சக்கரங்கள் ஏறியதில் அவர்களின் கால்களும் நசுங்கின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சிறுமி சரஸ்வதியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ராஜசேகரன் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News