எளாவூர் மீன் மார்க்கெட் கழிவறையில் கதவுகள் பூட்ட முடியாமல் பெண்கள் அவதி.
எளாவூர் மீன் மார்க்கெட்டில் கட்டப்பட்ட கழிவறை கதவுகள் பூட்ட முடியாத நிலையில் இருப்பதால் பெண்கள் அவதியடைந்துள்ளனர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட எளாவூரில் பழமை வாய்ந்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டில் பல ஆண்டு காலமாக கழிவறை இல்லாமல் திறந்தவெளியை பொதுமக்களும், விற்பனையாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக இப்பகுதியில் கழிவறை கட்டடம் ஒன்று கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து. மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு 2020 - 2021 ஆம் ஆண்டு மத்திய நிதியிலிருந்து ரூ.5.லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டத் திட்டமிட்டு அதன் கட்டிடப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கட்டி முடிக்கப்பட்டது. மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட கழிவறை கட்டடம் முழுமை அடையாமலும் கழிவறை கதவுகள் மூடாத நிலையிலும் உள்ளதால் கழிவறையை பெண்கள் சரிவரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கழிவறை கட்டடங்களை முறையாக ஆய்வு செய்யாமல் அதிகாரிகளும் பண பரிவர்த்தனை செய்ததாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சில மாதங்களிலேயே கட்டிடத்திற்கு பூசப்பட்ட வர்ணமும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் மத்திய அரசின் நிதி ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் முடங்கிக் கிடக்கிறது.
இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் கட்டடத்தை ஆய்வு செய்யவோ சரியாகப் பொருத்தாத கழிவறை கதவுகளை சரி செய்யவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல் அரைகுறை கட்டடத்தை கட்டிய ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்யவும், ஆய்வு செய்யாமல் பண பரிவர்த்தனை செய்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் என பல்வேறு தரப்பு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.