ஆரணி ஆற்றில் மேம்பாலம் கட்டித்தர மூன்று கிராம மக்கள் கோரிக்கை

Arani River -ஆரணி ஆற்றில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என மூன்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update: 2022-11-03 07:25 GMT

ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்லும் மக்கள்.

Arani River -ஆரணி ஆற்றில் உள்ள தரைப் பாலத்தை அகற்றி மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்கலம்,காரணி, புதுப்பாளையம், உள்ளிட்ட கிராமங்கள் ஆரணி ஆற்றை ஒட்டி உள்ள கிராமங்களாகும். இந்த 3 கிராமங்களில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமப் பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் பூக்கள், கீரை வகைகள், காய்கனிகள், உள்ளிட்டவை அதிக அளவில் இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து சென்னை, கோயம்பேடு, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம்,ஆரணி, பொன்னேரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து வருவார்கள்.

இந்த நிலையில் இப்பகுதி மக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல புதுப்பாளையம் பகுதியில் ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை  கடந்து தான் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவார்கள். இது மட்டுமல்லாமல் இப்பகுதிகளில் தொடக்கப்பள்ளி முடித்துவிட்டு மாணவர்கள் உயர்கல்வி படிக்க அருகில் உள்ள ஆரணி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படித்து வருவார்கள்.

தற்போது மழைக்காலம் வந்துவிட்டால் ஆரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு செல்லும்போது இப்பகுதியில் வாழும் பொதுமக்களும் மற்றும் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெரியபாளையம் மேம்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டிய அவல நிலை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்பகுதியில் வாழும் மக்கள் ஆண்டாண்டு காலமாக தரைப் பாலத்தை அகற்றி மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பெருமக்கள் என பலருக்கும் மனு அளித்தும் கோரிக்கை வைத்தும் தற்போது வரை இந்த கோரிக்கையானது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது ஆற்றின் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச்சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கிராமத்திற்கு சுற்றி செல்ல முடியாமல் தண்ணீரில் இறங்கி ஆற்றைக் கடக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்டு நீண்ட நேரம் தேடுதலுக்குப் பின்பு சுடலமாக மீட்கப்பட்டார். இதுபோன்று சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பலர் கூறுகையில் புதுப்பாளையம் பகுதியில் ஆரணி ஆற்றில் போடப்பட்டுள்ள தரைப் பாலமானது மழை காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது ஆற்றை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுவதாகவும், இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் மட்டும் உள்ளது. ஆனால் ஆற்றில்  தண்ணீர் வரும்போது சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி வர வேண்டிய அவல நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர். 

மேலும் ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் எங்களை நாடி வரும் அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் பாலத்தை கட்டி தருவதாக பொய் வாக்குறுதிகளை கூறிவிட்டு வெற்றி பெற்றவுடன் கண்டு கொள்வதில்லை என்றும், அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்க வைத்து தாங்கள் வரும்போது நிச்சயமாக இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதிகளை கொடுத்தும், அரசு கவனத்திற்கு கொண்டு சென்றும், தற்போது வரை இந்த பிரச்சனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் இந்த ஆரணி ஆற்றில் பல உயிரிழப்புகள் நடந்தேறி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

எனவே தற்போது உள்ள தி.மு.க அரசாவது இதன் மீது கவனம் செலுத்தி மக்கள் நலனை கருதி கொசவன் பேட்டை புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றில் மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News