கும்மிடிப்பூண்டியில் மின் ஊழியர்களை தாக்கிய மூன்று பேர் கைது

பெத்திக்குப்பம் ஊராட்சியில் மின்வாரிய அதிகாரிகளை பணி செய்ய வந்தபோது கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்;

Update: 2023-12-10 07:00 GMT

மின்வாரிய ஊழியர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 5.தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவ மழை மற்றும் மிக்ஜம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பம் ஆங்காங்கே கீழே சாய்ந்தும், மரங்கள் சாய்ந்து மின் ஒயர்கள் அருந்தும் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படாமல் கடும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதனை கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் உதவி செயற்பொறியாளர் முரளி தலைமையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எளாவூர், மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், கொண்டமநல்லூர், சாணாபுத்தூர், நேமலூர், சூரப்பூண்டி, பெரிய ஒபுளாபுரம், மெதிப்பாளைம், சுண்ணாம்புகுளம், நரசிங்கபுரம், எகுமதுரை, பூவலை, ஈகுவார்பாளையம், உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே ஊழியர்களை குழுக்களாக பிரிந்து இரவு, பகல்  பாராமல் மின்கம்பங்களை மாற்றி புது மின் ஒயர்களை சரி செய்தும் அதன் பின்பு ஒவ்வொரு குடியிருப்பு தெருக்களில் மின்சாரம் வழங்கப்பட்டு  வந்தது. 

அதேபோன்று இரவு பெத்திக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பழைய பைபாஸ் சாலையில் ஒயர்மேன்கள் மின் சம்பந்தமான பணிகளுக்காக காய்லர்மேடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42),மேலகழனி கிராமத்தைச் சேர்ந்த ரகு (வயது 45),உள்ளிட்ட பணியாளர்கள் வேலை செய்ய சென்றனர்.

அப்போது வாடகை வீட்டில் வசித்து வரும் சுப்பிரமணி ( வயது 54) எங்கள் வீட்டிற்கு இதுவரை மின்சாரம் வழங்கவில்லை என இருவரிடம் முதலில் சண்டையிட்டுள்ளார்.

அப்போது தனியார் மண்டபத்திற்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என கூறிய போது அதற்கு மின் ஊழியர்கள் அது ஜெனரேட்டர் மூலம் இயக்கப்படுகிறது. உங்கள் பகுதிக்கு இன்னும் 2 மணி நேரத்திற்குள் மின்சாரம் வந்து விடும் என கூறினர்.

ஆனால் சுப்பிரமணி மற்றும் அவருடைய மகன்கள் கோபாலகிருஷ்ணன்.(வயது 32), பிரபாகரன் (வயது 28), ஆகிய இருவரும் ஒயர்மேன்கள் சார்ந்த சமூகத்தை கூறி இருவரை சரமாரியாக தாக்கி முட்டி போட வைத்துள்ளனர்.

அதன் பின்பு மேற்கண்ட ஒயர்மேன்கள் தொலைபேசி முலம் சிப்காட் உதவி செயற்பொறியாளர் முரளிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செயற்பொறியாளர் முரளி இதை சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது செயற்பொறியாளரை காரை விட்டு கீழே இறக்கி முட்டி போடவும், கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதை கண்ட சுற்றுவட்டார கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்ததால் மின்வாரிய பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒயர் மேன்களை கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதை அறிந்த சிப்காட் காவல்துறையினர்  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் விசாரணையின் போது சுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் மின்வாரிய அதிகாரிகளை தாக்கியதை கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி அனைத்து பகுதி மின் ஊழியர்களிடம் பரவிய நிலையில் மின் ஊழியர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பணி பாதுகாப்பு கோரியும் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 60 மின்வாரிய ஊழியர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையம் அருகே உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈ டுபட்டனர்.

இதனால் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக சுப்பிரமணி அவரது மகன்கள் கோபாலகிருஷ்ணன், பிரபாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Tags:    

Similar News