காலை உணவு விரிவாக்க திட்டத்தில் சமையல் பயிற்சி முடித்தவருக்கு வேலை இல்லை
கும்மிடிப்பூண்டி அருகே காலை உணவு விரிவாக்க திட்டத்தில் சமையல் பயிற்சி முடித்தவருக்கு வேலை இல்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
பாதிக்கப்பட்ட சர்மிளா.
கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஏ.என்.குப்பத்தில் காலை உணவு வழங்கும் திட்டத்தில் பயிற்சிக்கு சென்றவரை சமையல் வேலைக்கு எடுக்காமல், திடீரென புதிய நபரை அனுமதித்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஏ.என்.குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 52 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கொண்டு வந்து ஆகஸ்ட் 25 முதல் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை அனைத்து பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்.
இந்த சூழலில் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஏ.என்.குப்பத்தில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சமையல் செய்து கொடுப்பதற்காக அதே கிராமத்தை சேர்ந்த சர்மிளா (வயது 37), (இவர் கணவனால் கைவிடப்பட்டவர்), தேர்வு செய்யப்பட்டு, ஏற்கனவே கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 3 நாட்கள் பயிற்சி முடித்து வந்துள்ளார். பின்னர் ஆகஸ்ட் 21 அன்று கூட உப்புமா, சாம்பார் ஆகியவற்றை மாதிரிக்காக சமைத்து கொடுத்துள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உப்புமா சாம்பார் நன்றாக உள்ளது என பாராட்டியுள்ளார்.இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 24 அன்று மாலை சமையல் பாத்திரங்கள், கேஸ், அடுப்பு ஆகிய பொருட்கள் வந்துள்ளது. அவற்றை எடுத்து சுத்தம் செய்து வைத்து விட்டு சென்றுள்ளார்.
வெள்ளியன்று (ஆக -25), காலை சமைக்க பள்ளிக்கு வந்ததும் உங்கள் பெயர் லிஸ்டில் இல்லை, வேறு ஆளை நியமித்துள்ளனர் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதனை கேட்டதும் சர்மிளா மனமுடைந்து போனார். உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டால் எல்லா மகளிர் திட்டம் தான் பொறுப்பு என்கிறார்கள். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். கணவனும் கைவிட்டு விட்டார், அரசு அதிகாரிகளும் கைவிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியராவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.