தடுப்பணையில் குளிக்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
ஆரணியாற்றின் தடுப்பணையில் குளிக்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியை சேர்ந்த திவாகர் (15). அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். ரம்ஜான் விடுமுறை நாளில் நண்பர்களுடன் ஆரணியாற்றின் தடுப்பணையில் குளிக்க சென்றார். அப்போது திவாகர் ஆற்றில் தேங்கி இருந்த சேற்றில் சிக்கி தத்தளித்தார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து கவரைப்பேட்டை போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.