சென்டர் மீடியனில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு
பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்ற கல்லூரி மாணவன் சென்ட்ரல் மீடியனில் மோதிஉயிரிழந்தார்.;
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைக்குப்பம்,புதூர் முதலாவது தெருவை சேர்ந்த சீனிவாசன்-கிரிஜா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்,ஒரு மகன் என மூன்று குழந்தைகள் இருந்தனர்.மகன் ரிக்கேஷ் (வயது22) பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனது கல்லூரியில் படிக்கும் நண்பர் சாந்தகுமார் (வயது22) என்பவரை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்குச் புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் மற்றொரு நண்பரை ஏற்றிக்கொண்டு கல்லூரி உள்ளே சென்றார்.கல்லூரி உள்ளே சென்றபோது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பயனின்றி ரிக்கேஷ் பரிதாபமாக பலியானார்.
இந்த விபத்து குறித்து ரிக்கேஷின் தந்தை சீனிவாசன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியனில் மோதி கல்லூரி மாணவர் ஒருவர் பலியானதும், இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல அனுமதி உள்ள நிலையில் மூவர் பயணம் செய்து அதில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தினாலும், இரு சககர வாகனத்தில் மூவர் செல்லக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறினர்