ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குமரப்பேட்டை ஊராட்சியில் சிறப்பு வழிபாடு
அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நடைபெறுவதை முன்னிட்டு பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சியில் ராமருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு இன்று ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ராமர், சீதாவிற்கு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிகளுக்கு காலை ஆலய வளாகம் முழுவதும் வண்ண வண்ண மலர்களால் தோரணம் போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பின்னர் ராமர், உற்சவர்களுக்கு பால்,தயிர், சந்தனம், குங்குமம், மஞ்சள், ஜவ்வாது, தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டு உடைகளாலும், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால், அலங்காரம் செய்து தீப, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குமரப்பேட்டை, பெரியபாளையம், கே.ஆர் கண்டிகை, உள்ளிட்ட சுற்று வட்டார சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த சுமார் 6000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
மாலை சுவாமி திருவிதி உலா நடைபெற்றது இவ்விழாவில் அனைத்து தெருக்களிலும் உள்ள பொதுமக்கள் தாங்கள் பகுதிக்கு உலா வந்த சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.