ஆரணி ஆற்றில் மணல் கொள்ளை: கண்டு கொள்ளுமா போலீஸ்?
ஆரணி ஆற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை போலீசார் தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பிச்சாட்டூர் பகுதியில் தோன்றி ஆரணி ஆறு சுருட்ட பள்ளி நந்தனம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், கல்பட்டு, ஏனம்பாக்கம், பெரியபாளையம், குமரப்பேட்டை, பாலேஸ்வரம், புதுப்பாளையம், காரணி, ஆரணி, ஏ.என்.குப்பம், புது வாயில், பொன்னேரி வழியாக பழவேற்காடு பகுதியில் உள்ள வங்கக்கடலில் சென்று சேர்கிறது.
மழைக்காலங்களில் ஆற்றில் மழை நீரும் மற்றும் பிச்சாடூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கரை புரண்டு ஓடும். வீணாகும் தண்ணீரை விவசாயத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் பயன்படும் வகையில் தமிழக அரசு ஆரணி ஆற்றில் மேற்கண்ட இடங்களில் தடுப்பணைகளை கட்டி வீணாக சென்று கடலில் சேரும் தண்ணீரை சேமித்து வைக்கப்படுகிறது. இந்த ஆரணி ஆறு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் ஆரணி ஆற்றின் நிலத்தடி நீர் மட்டத்தை நம்பி நெல், கேழ்வரகு, பூக்கள், கீரை, வெண்டைக்காய், கத்திரிக்காய், காராமணி, முள்ளங்கி, வேர்க்கடலை உள்ளிட்ட பருவ காலத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரியபாளையம் அருகே ஆரணி-குமரப்பேட்டை செல்கின்ற ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் கரைகளை சேதப்படுத்தி பிளாஸ்டிக் சாக்குகளில் மணல் நிரப்பியும், அங்கிருந்து டிராக்டர் சரக்கு வாகனங்களில் கடத்தி செல்கின்றனர். மேலும் மூட்டை ஒன்றுக்கு சுமார் 100 இருந்து 150 ரூபாய் வரையில் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் அதிக விலைக்கு மணல் விற்பனை செய்வதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை தடுக்க வேண்டிய ஆரணி காவல்துறையினர் மணல் கொள்ளை குறித்து கண்டு கொள்வதில்லை என்றும், எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்று ஆற்றில் மணல் கொலையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.