கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர், மின்சாரம் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்
கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு பகுதியில் மின்சாரம் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு சாலையில் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 61ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி என மொத்தம் சுமார் 2.5 லட்சத்திற்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்கனவே செய்து வந்த நிலையில் தற்போது நான்கு நாட்களுக்கு முன்பு கனமழையும் மற்றும் புயல் காரணமாக கும்மிடிப்பூண்டி, புதுகும்மிடிப்பூண்டி, எளாவூர், மெதிப்பாளைம், ஆரம்பாக்கம், தோக்கமுர், பூவலை, அயநெல்லூர், மேல்முதலம்பேடு, பெருவாயில், கிழ்முதலம்பேடு, அரசூர், பாலவாக்கம், கண்ணன்கோட்டை, கண்ணம்பாக்கம், எகுமதுரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருக்களில் உள்ள சுமார் 127 மரங்கள் மின்கம்பங்களில் சாய்ந்து மின் கம்பிகள் அறந்து விழுந்துள்ளது.அதனை மின்வாரிய ஊழியர்கள் 10 குழுக்களாக பிரிந்து அதனை சரி செய்யும் பணியில் தொடர்ந்து தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக குடிநீர், உணவு, ஆகிய அடிப்படை தேவைகளுக்காக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அறிந்த சில ஊராட்சி நிர்வாகம் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட டேங்கர் லாரியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியை ஒட்டியுள்ள முக்கிய பகுதியான வடுதலம்பேடு பகுதியில் ஆதிதிராவிட சமுதாய மக்கள் வசித்து வரும் பகுதியில் மழை பெய்த காரணத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த பகுதிக்கு 3.நாட்களாக குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு குடிதண்ணீர் வழங்க வேண்டும் என தகவல் கூறியும் நேற்று மாலை மணி வரை குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலிக்குடங்களுடன் வழுதலம்பேடு - ரெட்டம்பேடு சாலையில் அமர்ந்து மின்சாரம், குடிநீர் வழங்க கோரி சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராத காரணத்தினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊர்வலமாக கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற போது கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி இது சம்பந்தமாக உடனடியாக குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தனர்.
இதன் பின்னர் கூட்டம் கலைந்து சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.