சென்னை புறநகர் ரயில்களில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை புறநகர் ரயில்களில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-11-25 08:25 GMT

ரேஷன் அரிசி மூட்டைகள் பைல் படம்.

சென்னை- சூளூர்பேட்டை ரயில் மார்க்கத்தில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற நான்கரை டன் ரேஷன் அரிசி மூட்டைகளை  ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா ரேஷன் அரிசி வெளிமாநிலத்திற்கு தொடர்ந்து கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சென்னையில் இருந்து சூளூர்பேட்டை வழியாக செல்லும் 16 புறநகர் ரயில்களில் தொடர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரயிலில் பயணிகள் இருக்கைகளின் அடியில்  மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக  நான்கரை டன் எடையுள்ள 230  ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை திருவள்ளூரில் இயங்கும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஆறு மாதத்தில் சென்னை சூளூர்பேட்டை மார்க்கத்தில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

தமிழக நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு அட்டைக்கு ௨௦ கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இப்படி இலவசமாக வழங்கப்படும் அரிசியை மக்களுக்கு வழங்காமல் வெளி மார்க்கெட்டிற்கு கடத்தி சென்று ஓட்டல்கள் மற்றும் இரவு நேரட டிபன் கடைகளில் விற்பதற்காக தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இப்படி ரேஷன் கடைகளில் இருந்து அரிசி கடத்துபவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News