பெரியபாளையம் அருகே பூச்சி மருந்து அருந்தி பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு
பெரியபாளையம் அருகே பிளஸ் 2 மாணவன் பூச்சி மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
பெரியபாளையம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே சின்ன வண்ணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளியான முருகன். இவருடைய மகன் சூர்யா (17). இவர் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து படித்து வந்தார். தனது தந்தை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு விவசாய நிலத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உடல்நிலை சரி இல்லாமல் போனதால் தற்போது விவசாய கூலி வேலைக்கு போக முடியாமல் வீட்டிலே கிடைப்பதால் தன் மகனை குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக சூர்யா வீடுகளுக்கு வர்ணம் பூசும் வேலைக்குச் சென்றுள்ளார்.சூர்யா நேற்று காலை வீட்டிலிருந்து தனது நண்பருடன் வேலைக்கு செல்லும்போது வாந்தி எடுத்தார். நண்பரிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டதாகவும் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் சூர்யாவின் உறவினர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.