இருசக்கர வாகனத்தில் வந்தவரை தாக்கி நகை பறித்த இருவர் கைது

பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலியை பறித்து சென்றவர்களை கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கைது செய்த காவல்துறை

Update: 2023-06-09 03:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (29). இவர் தண்டலச்சேரியில் பால் கடை நடத்தி வருகிறார்.

தனியார் கூரியர் நிறுவனத்தில் வந்த பார்சலை வாங்குவதற்காக ஆரணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஆரணி பஜாரில் உள்ள மீன் மார்க்கெட் அருகே கூரியரை வாங்குவதற்காக வந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்தனர். அப்போது அவர்களிடம் இருந்து உதயகுமார் தப்பி செல்ல முயன்றதால் அவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 12 கிராம் தங்க சங்கிலியை பறித்து கொண்டு இருவரும் அவர்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதனையடுத்து காயமடைந்த உதயகுமார் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி காவல்துறையில் உதயகுமார் புகார் அளித்தார்.

இதனையடுத்து ஆரணி காவல்துறையினர் பஜாரில் ஆங்காங்கே கடைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் உதயகுமாரை இருவர் வழிமறித்து தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனடிப்படையில் குற்ற ஆவண பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில் தொடர் குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஆரணி தமிழ் காலனியை சேர்ந்த தமிழரசன் (25), கார்த்திகேயன் (25) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர் குற்றவாளி தமிழரசன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் வழிப்பறி செய்த 12 கிராம் தங்க சங்கிலியை அவர்களிடம் இருந்து காவல்துறையினர் மீட்டனர்.

இதனையடுத்து வழிப்பறி, அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த ஆரணி காவல்துறையினர் இருவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பஜாரில் கத்தியை காட்டி தங்க சங்கிலியை பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளி உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் விரைந்து துப்பறிந்து கைது செய்து சிறையில் அடைத்தால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News