கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-12-29 03:30 GMT

 குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் (மாதிரி படம்)

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சி ரெட்டிபாளையம் கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் இரண்டு தலைமுறையாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கிராமங்களுக்கு ஒட்டி சுண்ணாம்பு குளம் ஊராட்சி முழுவதும் கடல் சாரா நீர்நிலை ஒட்டி உள்ளதால் உப்பு தன்மையுடைய குடிநீர் மட்டுமே இப்பகுதியில் கிடைப்பதாக மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. எனினும் ரெட்டிபாளையம் கிராமத்தில் சுவை மிகுந்த குடிநீர் கிடைப்பதால் சுண்ணாம்பு குளம் ஊராட்சி உட்பட இதரப் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சரிவரை தண்ணீர் நிரப்பப்படாததால் குடிநீர் மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரெட்டிபாளையம் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் நேற்று சுண்ணாம்பு குளம் பொன்னேரி-சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே சுண்ணாம்பு குளம் பொன்னேரி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இப்பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருவதாகவும் மற்ற இடங்களுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதாக தங்களுக்கு சரிவரை தண்ணீர் கிடப்பதில்லை. தண்ணீர் பணம் கொடுத்து வாங்கும் அளவிற்கு தங்களுக்கு வசதி இல்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News